7,301 பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 18.50 லட்சம் பேர் எழுதினர்: ஒரு பதவிக்கு 253 பேர் போட்டி: அக்டோபரில் முடிவுகள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று குரூப் 4 தேர்வு நடந்தது. 7,301 பதவிகளுக்கு நடந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பதவியை பிடிக்க 253 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தேர்வுக்கான ரிசல்ட்டை அக்டோபர் மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 274 பணியிடம், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 3,593, இளநிலை உதவியாளர்(பிணையம்)-88, வரிதண்டலர் (கிரேடு 1)-50, தட்டச்சர்- 208, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-1,024, பண்டக காப்பாளர் ஒரு பதவி என 7,138 பணியிடங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர் 64 இடங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இளநிலை உதவியாளர் 43, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வரிதண்டலர் 49, 7 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியிடங்கள் என 163 இடங்கள் உள்பட மொத்தம் 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 30ம் தேதி அறிவித்தது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதில் 22 லட்சத்து 2942 பேர் தேர்வு எழுத அனுதிக்கப்பட்டனர். இதில் பெண்கள் 12,67,457 பேர், ஆண்கள் 9,35,354 பேர், மூன்றாம் பாலினத்தவர் 131 பேர், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 பேர் ஆதவற்ற பெண்கள், 6,635 முன்னாள் படைவீரர்கள். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 7,689 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு கண்காணிப்பு பணி, கண்காணிப்பாளர்கள், நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர், வீடியோ கிராபர்கள், சிசிடிவி டெக்னிசியன் என சுமார் 1.50 லட்சம் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம்,  சைதாப்பேட்டை, திருவான்மியூர், அண்ணாநகர், வடபழனி, பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 503 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,56,218 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.எழுத்து தேர்வில் பகுதி 1ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி 2ல் பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.காலை 10 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 8 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் பெற்றோரிடம் தங்கள் குழந்தையை ஒப்படைத்து சென்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவிக்கு இவ்வளவு பேர் எழுதியது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக குரூப் 4 தேர்வு ஒரு திருவிழா போல நடந்து முடிந்தது.  குரூப் 4ல் ஒரு பதவியை பிடிக்க 253 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து அந்த மாதமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். கலந்தாய்வு நவம்பர் மாதம் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: