திருப்போரூரில் ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்போரூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ச.வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பெரின் தவராஜ் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில் பொருளாளர் ஜீ.மத்தேயு, மாவட்டப் பொருளாளர் இரா.ஞானசேகரன், முன்னாள் வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசின் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், உயர்கல்வி ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும், 13331 ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும், ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்களின் அன்றாடக் கற்பித்தல் பணிகளை பாதிக்கும் தினசரி இணையதள பதிவேற்றப் பணியை நிறுத்த வேண்டும் ஆகியன உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் வட்டப் பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.

Related Stories: