சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் முடிவு

சென்னை: அக்டோபர் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அட்டாக் கமிட்டி தலைவர் எஸ்.வெங்கடேசலு, ஜி.ராஜேந்திரன் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாநில தலைவர்கள் கே.கணேசன், எஸ்.மதுரம் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சென்னை, தலைமை செயலகம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துறைகளில் காலியாக உள்ள ‘டி’ பிரிவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒன்றிய அரசு வழங்குவது போல அகவிலைப்படியை தமிழக அரசு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் தனிக்கூலி, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

மேல்நிலை பணியாளர்களுக்கு ஓய்வுபெறும் வயதை 58 வயதில் இருந்து 60ஆக உயர்த்தியதுபோல ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு ஓய்வு வயதை 62ஆக உயர்த்த வேண்டும். பஞ்சாயத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் அரசு நிரந்தர பணியாளர்கள், தினக்கூலி, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், தற்காலிக பணியாளர்களிடம் வசூலிக்கும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். வருகிற அக்டோபர் மாதத்தில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து ‘75வது பவள விழா மாநாடு’ மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: