சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ், ஆதரவாளர்கள் மீது சி.வி.சண்முகம் எம்.பி. புகார்

சென்னை: கடந்த 11ம் தேதி ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் புகுந்து, அங்குள்ள பொருட்களை சூறையாடியது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிமுக முன்னாள் எம்.பி. சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக கடந்த 11ம் தேதி ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புக்கு இடையே மாபெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில், அதிமுகவின் தலைமை அலுவகம் சீல் வைக்கப்பட்டது. சீலை அகற்றக்கோரி இரு தரப்பும் நீதிமன்றத்தை நாட, எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சாவியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு சாவியும் அலுவலக மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு பிறகு அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், நிர்வாகிகளால் நிரம்பி வழியும் அதிமுக அலுவலகம் வழக்கத்திற்கு மாறாக அலங்கோலமாக காட்சியளித்தது. இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் காணாமல் போன பொருட்கள் மற்றும் அங்கு ஏற்பட்ட சேதங்கள் என்ன என்பது குறித்து விரிவான பட்டியல் தயார் செய்து, அந்த குறிப்பிட்ட பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என அதிமுகவின் முன்னாள் எம்.பி.யான சி.வி.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் அணியினர் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சி சார்ந்த கோப்புகள், கட்சி தொடர்பான சொத்து பத்திரங்கள், ஆவணங்கள், கம்பியூட்டர்கள், பென்டிரைவ், வெள்ளி செங்கோல் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமன்றி, ரூ.31 ஆயிரமான பெட்டிக்காசும் கொள்ளையடிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்தனர். மேலும், கட்சி சார்ந்த ஆவணங்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம் பற்றிய மதுரை வங்கி பாஸ்புக், கூட்டணி கட்சியுடன் போடப்பட்ட ஒப்பந்த கடிதங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் என அனைத்தையும் ஓபிஎஸ் தரப்பு கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகவும், தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், உள்ளிட்ட மூன்று மாடிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் அறைகளின் கதவுகள் கடப்பாறை மூலமாக தகர்க்கப்பட்டும், அலுவலகத்தில் இருந்த புகைப்படங்கள், மேஜை, நாற்காலிகள், கணினிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டும் இருந்ததை குறிப்பிட்டனர்.

மேலும், ஆவணங்கள் அனைத்தும் கிழித்து வீசப்பட்ட நிலையில், அலுவலகம் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டிருந்தது. எனவே, புகாரில் தெரிவித்துள்ள பொருட்கள் அனைத்தையும் மீட்டுதந்து, குறிப்பிட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.வி.சண்முகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.       

Related Stories: