தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமாக கார்த்திகை தீபம், உத்ராயண புண்ணியகாலம், தட்சிணாயன புண்ணியகாலம் போன்ற விழாக்களின்போது அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் பிரம்ேமாற்சவ கொடி ஏற்றப்படும். ஆடிப்பூர பிரம்ேமாற்சவத்தின்போது மட்டும் உண்ணாமுலையம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டு விழா நடைபெறும்.

அதன்படி ஆடிப்பூர பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4மணியளவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உண்ணாமுலையம்மன் சன்னதி பின்புறம் உள்ள பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வெள்ளி கவசத்தில் விநாயகரும், சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மனும், உண்ணாமுலையம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள், தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து 10 நாட்கள் சுவாமி வீதியுலா நடைபெறும். தினமும் காலை மற்றும் இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலிக்க உள்ளனர். விழாவின் நிறைவாக வரும் 1ம் தேதி காலை கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தத்தில் பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் நடைபெறும்.

மேலும், அன்று இரவு காமதேனு வாகனத்தில் வீதியுலாவும், நள்ளிரவு 12 மணி அளவில் உண்்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீமிதி விழாவும் நடைபெறும். இந்த தீ மிதி விழா அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே சிறப்பு வாய்ந்தது. வேறு எந்த சிவாலயத்திலும் தீ மிதி விழா நடைபெறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: