நெல்லை மாநகர பகுதியில் 10 ஆயிரம் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை-போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தகவல்

நெல்லை :  நெல்லை மாநகர பகுதியில் கொக்கிரகுளத்தில் இருந்து பாளை. மார்க்கெட் வரையும், வண்ணார்பேட்டையில்  மேம்பாலம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும், பாலத்தின் மத்திய பகுதியிலும், அணுகுசாலை உள்ளிட்ட பகுதிகளில் 54 சிசிடிவி கேமிரா மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை, வண்ணார்பேட்டையில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில் ஏட்டுகள் அருள் ஷோபா, கண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து சிசிடிவி கேமிரா பதிவு காட்சிகளை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘கொக்கிரகுளம் பகுதியில் இருந்து பாளை.  சமாதானபுரம் வரையிலும், வண்ணார்பேட்டை தெற்கு, வடக்கு பைபாஸ் சாலையிலும்  புதிதாக 54 சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், 18 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு திறந்து  வைக்கப்பட்டுள்ளது. வண்ணார்பேட்டையில் இந்த காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ள  பகுதிகளில் வாகன போக்குவரத்து, பொதுமக்களின் நடவடிக்கைகள், குற்ற  சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இதற்கான கட்டுப்பாட்டு அறையில் 24 மணி  நேரமும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவர்கள்  சிசிடிவி காமிரா பதிவுகளை பார்த்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மைக் மூலம்  அறிவுரை வழங்குவார்.

 

இதுதவிர நெல்லை மாநகர் பகுதியில் 10 ஆயிரம்  சிசிடிவி காமிராக்களை பொதுமக்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காமிரா 3வது கண்ணாக திகழ்கிறது. இதன் மூலம்  குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து, அவர்களை பிடித்து தண்டனை  வாங்கிக் கொடுப்பதற்கும் உறுதுணையாக இருக்கும்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும், தங்கள்  வீடுகளில் வீட்டுக்குள் ஒன்றும், நாட்டுக்கு (வெளிப்புறத்தில்) ஒன்றும் பாதுகாப்பு அம்சம்  கருதி சிசிடிவி காமிராவை பொருத்த வேண்டும். நெல்லை மாநகரத்தை பாதுகாப்பான  நெல்லையாக மாற்றுவதற்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, எஸ்ஐ பாண்டி, எஸ்எஸ்ஐ கருத்தபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: