மணலி அருகே 1200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆசியாவின் 3வது பெரிய ஐம்பொன் நடராஜர் சிலை மீட்பு: எந்த கோயிலில் திருடப்பட்டது என விசாரணை

சென்னை: 1200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆசியாவின் 3வது பெரிய ஐம்பொன் நடராஜர் சிலையை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மணலி அருகே உள்ள இரும்பு கடையில் இருந்து மீட்டுள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் டிஜிபி ஜெயந்த் முரளி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் பெண் ஒருவர் தான் வைத்திருந்த நடராஜர் சிலை பழமையான சிலை இல்லை என்று சான்று வழங்க கோரி இந்திய தொல்லியல் துறைக்கு 2017ல் இடைத்தரகர் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

 அந்த பெண் தற்போது வசிக்கும் ஜெர்மனி நாட்டிற்கு இந்த சிலையை கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார். அதன்படி இந்திய தொல்லியல் துறை நடராஜர் சிலையை ஆய்வு செய்த போது, இந்த சிலை பழமையானது என யூகிக்கப்படுவதால் சிலையை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முடியாது என்று விண்ணப்பித்த பெண்ணுக்கு கடிதம் அனுப்பினர். அதன் பிறகு அந்த பெண் நாட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நடராஜர் சிலை தற்போது எங்குள்ளது என்று விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சென்னை மணலி அடுத்த சாத்தங்காடு இரும்பு மார்க்கெட் ஒன்றில் சிலை இருப்பது தெரியவந்தது. அதன்படி அதிரடி சோதனை நடத்தினோம். அப்போது கடையின் ரகசிய இடத்தில் 4.5 அடி உயரம் உள்ள பெரிய நடராஜர் சிலை இருந்தது தெரியவந்தது.  சிலை பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்ட சிலையானது 1200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். சிலையின் தொன்மையையும் பஞ்சலோக தன்மையையும் அறிய டெல்லி மற்றும் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் நிபுணத்துவத்தை பெற திட்டமிட்டுள்ளோம். விசாரணை முடிவிற்கு பிறகு தான் இந்த சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்று தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: