கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிண்டால் பருத்தி ரூ.9,599க்கு ஏலம்-விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணம் : கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 599 க்கு விற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் பருத்தி ஏலம் தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் கண்காணிப்பாளர் பிரியமாலினி மற்றும் விளம்பர மற்றும் பிரச்சார கண்காணிப்பாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வாராந்திர ஏலத்திற்காக கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 2 ஆயிரத்து 860 லாட் கொண்டு வரப்பெற்றது. விவசாயிகள் சராசரியாக 4,500 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

இதில் கும்பகோணம், கதிராமங்கலம், பண்ரூட்டி, திருப்பூர், ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளை சார்ந்த 17 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி மதிப்பு சராசரியாக 4 கோடி ரூபாய் ஆகும்.இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 599 க்கு இருந்தது. குறைந்தபட்ச விலை ரூ.9 ஆயிரத்து 200 என விற்றது. பருத்தியின் சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 409 என விற்பனை ஆனது. இந்த வாரசந்தையில் நடந்த பருத்தி ஏலம் சிறப்பாக இருந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: