எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம்

திருவெற்றியூர்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர் மின் கோபுரம் வழியாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காக அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், எண்ணூர் கொசஸ்தலை ஆறு பகுதியில் உயர் மின் கம்பிகளை தாங்கும் புதிய கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் செய்வதில் சிரமம் ஏற்படும் எனவும், அதனால் உயர் மின் கம்பிகளை தாங்கும் கோபுரங்களை ஆறு அல்லாத இடங்களில் மாற்றி அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை மீறி பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை கண்டித்து எண்ணூர் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கொசஸ்தலை முகத்துவார ஆற்று பகுதியில் திரண்டு, 30க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கோபுரம் அமைக்கப்படும் ஆற்றுப்பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் கோபுரங்களை மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் மாற்ற வேண்டும், வடசென்னை அனல் நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை குறித்து தகவல் தெரிவிப்பதாக சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: