குன்னூரில் படிப்படியாக குறையும் ரேலியா அணை நீர்மட்டம் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

குன்னூர்:  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததால் ரேலியா அணை நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக ரேலியா அணை இருந்து வருகிறது. இந்த அணை 43.5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து  தண்ணீர் குன்னூர் நகரின் குடியிருப்பு  பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வறட்சி காலங்களில் தண்ணீர் அளவு 10 அடிக்கும் குறைவாகவே இருந்தது.

இதனால், மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ., தொலைவில் உள்ள நீரோடைகளில் இருந்து வாகனங்கள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குன்னூர் பகுதியில் மழை குறைவு காரணமாக அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக  ஊடடி,  கூடலூர் போன்ற பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வரும் சூழ்நிலையில் குன்னூரில் மழையின் அளவு வெகுவாக குறைந்தது. இதனால் ரேலியா அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து 35 அடியாக நீர்மட்டம் உள்ளது.  மேலும் இப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  இதனால் குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

Related Stories: