தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை பெருக்கிட தொழில்முனைவோர்கள் முன் வரவேண்டும்: கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிக்கை:ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக விளங்கும் தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உட்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50% அல்லது ரூ.2.50 கோடி இவற்றில்  எது குறைவானதோ அது  தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில் முனைவோர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்   சீரிய முயற்சியினால்,  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணையின்படி, தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணையானது (எண்   97  கைத்தறி, கைத்திறன்,  துணிநூல் மற்றும் கதர்த் துறை, நாள் 24.06.2022)  இவ்வரசால்  வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர  நிறுவனங்களின்  மூலம் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு  வேலைவாய்ப்பு பெருகும்.  மேலும் அதிகளவில் அந்நியச்  செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

இது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டம் ஆகும். இதன் காரணத்தால் தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் வளர்ச்சிப் பெருகி  வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தமிழ்நாடு அரசால் உரிய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும்  பயன்படுத்தி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்திடவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடவும்   அனைத்து  தொழில்முனைவோர்கள்  முன் வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: