நகராட்சி 26வது வார்டில் ₹22 லட்சத்தில் குளம் தூர்வார நடவடிக்கை-நகரமன்ற தலைவர் தகவல்

தர்மபுரி : தர்மபுரி நகராட்சி 26வது வார்டில் உள்ள குண்செட்டி குளம் ₹22 லட்சத்தில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தெரிவித்தார். தர்மபுரி நகராட்சி 26வது வார்டில் முருகன் கோயில் அருகே குண்செட்டி குளம் உள்ளது. இந்த குளத்தில் பக்தர்கள் குளித்து முடித்து சுவாமியை வழிபடுவார்கள். இக்குளத்தின் நான்கு திசையிலும் படிகட்டு உள்ளது. தற்போது இக்குளம் முழுவதும் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் குளத்தை பல ஆண்டாக முறையாக பராமரிக்கப்படாததால், குளத்தில் தண்ணீர் பாசிபடர்ந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கழிவுநீர் இந்த குளத்திற்குள் செல்கிறது. அதில் கழிவு பொருட்கள் மற்றும் குப்பை கொட்டுகின்றனர். இதனால் இந்த குளத்தின் தண்ணீர் நிறம்மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் குண்செட்டி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது கூறுகையில், தர்மபுரி நகராட்சி 26வது வார்டில் உள்ள குண்செட்டி குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்த ₹22 லட்சத்தில் பணிகள் தீவிரமாக நடக்கிறது. விரைவில் தூர்வாரும்பணி நடக்கும். பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

Related Stories: