மாணவன் தற்கொலை முயற்சி பள்ளி வளாகத்தில் போலீஸ் குவிப்பு: ஆர்டிஓ விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவன்  நேற்று முன்தினம் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்றது.காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் நேற்று முன்தினம் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஆசிரியர் மாணவனை கண்டித்ததால் ஏற்பட்ட கோபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்த பள்ளி  சூறையாடப்பட்டதுபோல எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பள்ளி வளாகம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ கனிமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி தாசில்தார் பிரகாஷ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவை கலெக்டர் ஆர்த்தி அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆர்டிஓ தலைமையில் பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஆர்டிஓ தெரிவித்தார்.

Related Stories: