தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, ஓம் சக்தி நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், பொதுமக்கள் வசதிக்காக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு  உள்ளது. இந்த கால்வாயை முறையாக  பராமரிக்காததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

மேலும்,  அங்குள்ள வீடுகளின் முன் குளம்போல் கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்கின்றவர்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, ஓம்சக்தி நகரில் மாதத்துக்கு ஒரு முறையாவது பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, வீடுகள் முன் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதுபற்றி தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, கடந்த 2 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி, சாலையில் வழிந்தோடுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்க உள்ளதால், அதற்கு முன் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை, சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சரி செய்து தர வேண்டும். இல்லையெனில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது. மேலும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்’’ என்றனர்.

Related Stories: