சென்னையில் 14 அரசு பள்ளிகளை மேம்படுத்த சன் டிவி ரூ.4.43 கோடி நிதி உதவி

சென்னை: சன் டிவி அளித்த 4 கோடியே 43 லட்சம் ரூபாய் நிதி உதவியின் மூலம் சென்னையில் 14 அரசுப் பள்ளிகளில் கற்றல் சூழலை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டிவி பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 14 அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கவும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் “வாழ்க்கைக் கல்வி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு சன் டிவி 4 கோடியே 43 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது. இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இவற்றை மாணவர்களின் பயன்பாட்டுக்கு சன் டிவி சார்பில் காவேரி கலாநிதி மாறன் அர்ப்பணித்தார். பெரம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை காவேரி கலாநிதி மாறன் தொடங்கி வைத்து, டிஜிட்டல் வகுப்பறைகளை பார்வையிட்டார். இதுபோல, அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறைகள், மேம்படுத்தப்பட்ட கழிவறை வசதிகள், சுற்றுச்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தோட்டம் ஆகியவற்றையும் காவேரி கலாநிதி மாறன் திறந்து வைத்தார். ஏழை எளியோருக்கு கல்வி, அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சன் டிவியும், சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டிவி இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: