சின்ன சேலம் பள்ளி மாணவி மர்மச்சாவு கலவரத்தை தூண்டிவர்கள் மீது சட்டப்படி தண்டனை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலையில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்களோ, மாணவியின் நெருங்கிய உறவினர்களோ இல்லை. 500க்கும் மேற்பட்டவர்கள் வெளியூரிலிருந்து வந்து திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் இருந்து கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவியின் மர்மச்சாவு குறித்தும் விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: