வேளச்சேரி காவல் நிலையத்தில் ஏட்டு தற்கொலை முயற்சி: உயரதிகாரிகள் விசாரணை

வேளச்சேரி: வாரவிடுமுறை தர மறுத்ததால்  தலைமை காவலர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வேளச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார்(40). இவர் வேளச்சேரி காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என, காவல்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில்,  செந்தில்குமாருக்கு, முறையாக வாரவிடுமுறை வழங்குவதில்லை என கூறப்படுகிறது. மேலும், பணி ஒதுக்கீடு தொடர்பாக, இவருக்கும், மற்றொரு தலைமை காவலருக்கும் இடையே, தகராறு இருந்துள்ளது.

ஆனால், காவல் ஆய்வாளர் இப்பிரச்னை தொடர்பாக தீர்வு காணவில்லை என கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த  செந்தில்குமார், இதுபற்றி, சக போலீசாரிடம் விரக்தியாக கூறி உள்ளார். இந்நிலையில், நேற்று, பணிக்கு வந்த செந்தில்குமாருக்கும், மற்றொரு போலீசாருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனஉளைச்சல் அடைந்த செந்தில்குமார், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த சக போலீசார், அவரிடமிருந்து  மண்ணெண்ணெய் பாட்டலை பிடுங்கி, அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறை உயரதிகாரிகள் செந்தில்குமார் மற்றும் அவர் குற்றம் சாட்டிய போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில், தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories: