காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

19, 20ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேல் பவானியில் 10 செ.மீ., நடுவட்டம் 9 செ.மீ., சின்னக்கல்லார் 7 செ.மீ., ஹாரிசன் எஸ்டேட், பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் தலா 6 செ.மீ., வால்பாறை பிடிஓ, சோலையார், கூடலூர் பஜார், தேவாலாவில் தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டி தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: