ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோயில் தெப்பகுளத்தை சீரமைக்க வேண்டும்: ஆண்டிபட்டி மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் ஜம்புலிபுத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதலிநரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வருடந்தோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவதுடன், வாரந்தோறும் சனிக்கிழமை விஷேச நாளாக இருக்கும். ஆண்டிபட்டி சுற்றியள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயிலுக்கு முன்பு தெப்பக்குளம் அமைந்துள்ளது. கோயிலில் அமைந்துள்ள கதலிநரசிங்க பெருமாளுக்கு இந்த தெப்பக்குளத்தில் இருக்கும் தண்ணீரின் மூலமாக தான் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.

மேலும் நேர்த்திகடன் செலுத்த வரும் பக்தர்கள் இந்த குளத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த தெப்பக்குளம் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. குளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வரத்து ஓடை ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் உள்ளதால் நீர்வரத்து ஏற்படவில்லை. மேலும் அந்தப்பகுதி மக்கள் குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் குப்பைகளை அந்த குளத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் தெப்பக்குளம் குப்பை நிறைந்து  காட்சியளிக்கிறது. மேலும் தெப்பக்குளத்தில்  உள்ள படிக்கட்டுகள், குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஊராட்சி நிர்வாகம் அல்லது அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: