நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரீடர் மீட்பு படையின் உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. இதையடுத்து 74 பேர் கொண்ட குழு மீட்பு பணிகளுக்கு வர இருப்பதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுக்காக்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்  மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. முக்கிய ஆறுகளான மாயார், பாண்டியாறு, பொன்னம்புலா ,காளம்புலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மங்குனியாறு மற்றும் குடிவயல் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அருகிலுள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மீட்பு பணியில் காவல்துறை,தீயணைப்புதுறை, வருவாய்துறையினர் அடங்கிய 42 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நீலகிரியில் அதிகனமழைகான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தேசிய பேரீடர் மீட்பு படையை நாடியுள்ளது.

கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை தொடர்வதால் சிறு ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடலூரில் இருந்து தோட்ட மூல ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் இடிந்து விழுந்தது. இதனால் ஓடையை கடந்து செல்ல முடியாமல் அந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

குன்னூர் சுற்று வட்டாரத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் ஏரிகள்,அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து காணப்படுகின்றது. குந்தா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரங்களில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரெட் அலர்ட் காரணமாக மாவட்டத்தில் அணைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: