பவானி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் மேம்பாலத்தின் கீழ் குப்பை கழிவுகள் அகற்றம்: நெடுஞ்சாலைத் துறை அதிரடி; பக்தர்கள் மகிழ்ச்சி

பெரியபாளையம்: பெரியபாளையம் மேம்பாலத்தின் கீழ் கெட்டப்பட்டுள்ள அடர்ந்த குப்பை, இறைச்சி கழிவுகளை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர். எனவே,அப்பகுதி மக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பெரியபாளையம் ஆரணி ஆற்றின் கரை அருகே புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆடி மாதம், ஆடி திருவிழா தொடர்ந்து 14 வாரங்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இக்கோயிலுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா கர்நாடகா போன்ற பல்வேறு அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு செல்ல ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் கடந்துதான் செல்ல வேண்டும். இது மட்டுமில்லாமல், பவானி அம்மன் கோவில் அருகில்  அரசு மருத்துவமனை, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு  மேல்நிலைப் பள்ளி உள்ளிட்டவை இயங்கி வருகிறது.  இதுதவிர சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு செல்ல வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக தான் கடந்து செல்ல வேண்டும். தற்போது, மேம்பாலம் கீழ் சிலர் குப்பைகளையும் அங்குள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

ஹோட்டல்கள் மற்றும் வீடுகளிலிருந்து பைப் வழியாக  கொண்டு வந்து ஆரணி ஆற்றில் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். ஆரணி ஆற்றின் பகுதியில் விவசாயத்திற்காக சேமித்து வைக்கும் தண்ணீரில் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு தண்ணீர் மாசு ஏற்பட்டுள்ளது.  மேலும், வருகின்ற 17ம் தேதி ஆடி மாதம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்க இருப்பதால் மேம்பாலத்தின் கீழ் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்களும் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சந்திரசேகர் மேற்பார்வையில் ஆய்வாளர் சுந்தர் முன்னிலையில் 2 பொக்லைன் இயந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் மேம்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்  சென்று வர மேம்பாலத்தின் மீதுள்ள இரண்டு நடைபாதைகளில் சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேம்பாலத்தில் செல்லும் சிலர் குப்பைகளையும் அங்குள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை மேம்பாலம் கீழ் கொட்டுகின்றனர்.

Related Stories: