ஊட்டி அழகர்மலை கிராமத்தில் ஒற்றையடி பாதையில் சடலத்தை தூக்கிச்செல்லும் பரிதாபம்: 20 ஆண்டுகளுக்கும் மேல் நிறைவேறாத கோரிக்கை

ஊட்டி:  ஊட்டி அருகே அழகர்மலை கிராமத்தில் கான்கீரிட் நடைபாதை வசதியின்றி ஒற்றையடி பாதையாக உள்ளதால் இறந்தவர்களின் உடலை கூட சுமந்து செல்ல முடியாத அவல நிலை நீடிக்கிறது. ஏழை எளிய மக்கள் என்பதால் புறக்கணிக்கப்படுவதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைக்குந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதையில் முதல் வளைவில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அழகர்மலை கிராமம் அமைந்துள்ளது. உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இங்கு வசிக்கக்கூடிய மக்கள் மலை காய்கறி விவசாய பணிகள், கட்டுமான பணிகளுக்கு கூலி வேலைக்கு சென்று கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.

இங்குள்ள குடியிருப்புகளுக்கு நடுவே நடந்து செல்ல முறையான கான்கீரிட் நடைபாதை வசதி இல்லை. இதனால் மண் பாதையில் நடந்து செல்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக மாறி விடுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கிராமத்தில் இறந்த ஒருவரின் உடலை, ஒற்றையடி பாதை வழியாக சுமந்து செல்ல முடியாமல் பல இன்னல்களுக்கு இடைேய எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடையேயும் மனுக்கள் அளித்தும் பலனில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் காரணமின்றி பணிகள் ஏதுவும் மேற்கொள்ளாமல் நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதேபோல் மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்ல வசதியாக முறையாக கால்வாய் வசதி இல்லாத சூழலில் மழை சமயங்களில் கழிவுநீருடன் அடித்து வரப்படும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘அழகர்மழை கிராமம் கல்லட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு வசிக்கக்கூடிய பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடியிருப்புகளுக்கு நடுவே செல்லக்கூடிய பாதை கான்கிரீட் பாதையாக இல்லாததால் கடும் பாதிப்படைந்து வருகிறோம். சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் என்பதால் அலட்சியம் காட்டுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது’’ என்றனர்.

Related Stories: