வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயில் சீரமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா மூலம் தமிழகம் முழுவதும் பிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகின்றது. இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகை புரிகின்றனர். கோயிலின் அருகே உள்ள திருக்குளத்தில் வெளியூர் பக்தர்கள் குளித்துவிட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த திருக்குளம் தற்போது எப்போதும் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடமுருட்டி ஆற்று நீர் மூலம் இக்குளம் நீர் நிரப்பட்டு அசுத்தநீர் வடிகால் பாசன வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் நீராடி அம்மனை தரிசித்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் பொதுப்பணித்துறை அலட்சியம் காரணமாக இக்குளத்திற்கு ஆற்றுநீர் வருவது தடைபட்டு போய்விட்டது.

ஆகவே திருவிழா காலங்களில் மட்டும் கோயில் நிர்வாகம் போர்வெல் மூலம் குளத்தில் நீர் நிரப்பி வருகின்றது. திருவிழா காலங்கள் இல்லாத நிலையில் பூட்டு போட்டு வைக்கப்படுகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தற்போது இக்குளத்தில் உள்ள குறைந்த அளவு தண்ணீர் பச்சை நிறமாக மாறி பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் பயன்பாடு இல்லாத நிலைமையில் உள்ளது. மேலும் குளத்தைச் சுற்றி செடி, கொடிகள் முளைத்து குளத்தின் கரைகளுக்கு பாதுகாப்பற்ற நிலமையை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே திருக்குளத்தை சீரமைத்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: