மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான்

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில், 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதனை ஒட்டி கல்லூரி, பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பேருந்து நிலையம், காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், மேட்டு தெரு, காவலான் தெரு வழியாக கலெக்டர் அலுவலகம் வரை இப்போட்டி நடைபெற்றது. இதில், ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சவீதா கல்லூரி மாணவர் கோகுல் சீனிவாசன் 2வது, 3வது இடத்தை அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த காவியா,  இரண்டாம் இடத்தை எஸ்எஸ்கேவி பள்ளி மாணவி அர்ச்சனா, மூன்றாம் இடத்தை ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா ஆகியோர் பிடித்தனர். இதில், முதல் 5 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: