ரூ.58 கோடி சொத்து குவிப்பு வழக்கு மாஜி அமைச்சர் காமராஜின் ரகசிய லேப்டாப் சிக்கியது: சினிமா பாணியில் மடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: மாஜி அமைச்சர் காமராஜின் ரகசிய லேப்டாப்பை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சினிமா பாணியில் சென்று பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் 52 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு  துறை சோதனை வரும் தகவல் முதல் நாளே காமராஜ் தரப்புக்கு தெரிந்துள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரி சோதனையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ஆர்.காமராஜ் முதல் நாள் இரவு 12 மணிக்கு மேல் சில பொருள்களை தனது வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றி உள்ளார். இதில் காமராஜ் வீட்டில் இருந்து ஒரு பெட்டியை இரவு 12 மணிக்கு மேல் காமராஜ் வீட்டில் உள்ள ஒரு பாதுகாப்பு காவலர் (இப்பொழுதும் தொடர்கிறார்) அதை எடுத்து கொண்டு மன்னார்குடி கம்மாள தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்திருக்கிறார்.

சோதனை நடைபெறும் முதல் நாள் இரவே காமராஜ் வீட்டை போலீசார் கண்காணித்து கொண்டிருந்தனர். லஞ்ச ஒழிப்பு துறை அதை கொண்டு சென்ற வரை பின்தொடர்ந்து எங்கே கொண்டு வைக்கிறார் என்று பார்த்து விட்டு அதை தொடர்ந்து கண்காணிக்க ஒரு காவலரை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காமராஜ் வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு செய்ய சென்றவுடன் காமராஜ் வீட்டின் அருகில் உள்ள (காமராஜுக்கு நம்பிக்கையான) ரவிசந்திரன் என்ற நபரும் மற்றொருவரும் கம்மாள தெருவிற்கு சென்று அதை எடுத்து கொண்டு மன்னார்குடி பை பாஸ்  சாலையில் உள்ள ரவிசந்திரன் என்பவர் வாட்டர் கேன் விற்கும் கடையில் வைத்துள்ளனர். ரவிச்சந்திரனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு காவல் அதிகாரி, ரவிச்சந்திரன் கடையை பூட்டி விட்டு செல்லும் வரை காத்திருந்துவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பெட்டியை பதுக்கி வைத்துள்ள ரவி சந்திரனை தொடர்பு கொண்டு கடையை திறக்க சொல்லியும் திறக்காததால் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை வர வைத்து அவர் முன்னிலையில் பூட்டை உடைத்து அந்த பாக்சை கைபற்றியுள்ளனர். அந்த பெட்டியை திறந்து பார்க்கும் போது அது மிக விலை உயர்ந்த லேப்டாப் என தெரிய வருகிறது. அதில் மிக முக்கிய ஆவணங்கள் ஆதாரங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. காமராஜ் சம்பந்தபட்ட மொத்த விபரங்களும் அதில் இருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நினைக்கின்றனர். மொத்த சொத்து விபரங்களும் அதில் இருக்கலாம் எனவும் காமராஜின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக தொடர்புகள் அதில் இருக்கலாம் எனவும், அதில் தினமும் வரவு செலவுகளை கண்காணிக்கலாம் எனவும் அவரை சார்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

காமராஜ் தொடர்புடைய நிறுவனங்களில் உள்ள மொத்த லேப்டாப்பும் ஒரு சர்வர் மூலம் இதில் இணைக்கபட்டிருக்கலாம் எனவும் சமீபத்திய அதிமுக பொது குழு வரவு செலவு கூட அதில் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் பல லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டை வெளியில் பதுக்காமல் அதை நிர்வாகிக்கும் காமராஜின் மகன் டாக்டர் இனியன் தன் கையிலேயே வைத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. எனவே லேப்டாப்பில் உள்ள தகவல்களை எப்படியாவது கைப்பற்றும் முயற்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதேநேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து லேப்டாப்பை மீட்டெடுக்கலாமா என காமராஜும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

* பதற்றத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள்

லேப்டாப்பை திறந்தால், காமராஜ் சொத்துகள் பற்றிய பல ரகசியங்கள் வெளிவரலாம். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின்போது நடந்த பல தில்லு முல்லுகள், இருக்கலாம் என்றும், சசிகலா, திவாகரன், இளவரசி, விவேக், ஜெய் ஆனந்த், கிருஷ்ணப்பிரியா போன்றவர்களுடன் உள்ள கொடுக்கல் வாங்கல், பினாமி சொத்து, முதலீடுகள், தஞ்சாவூர் மருத்துவமனை, காண்ட்ராக்டர்கள்  தொடர்பான தகவல்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் காமராஜ் தரப்பு மட்டுமல்ல அதிமுகவில் உள்ள பலரும் பதட்டத்தில் உள்ளனர்.

Related Stories: