காரைக்குடி சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும்; அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை:  காரைக்குடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும், இந்த கல்வி ஆண்டில், ஒருங்கிணைந்த  5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. சென்னை, தரமணியில் உள்ள பல்கலை கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கி  வைத்தார். இதில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன்,  துணைவேந்தர் சந்தோஷ் குமார், சட்ட படிப்புகளுக்கான இயக்குனர் விஜய லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி, ‘ அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னையில் நாங்கள் யாருக்கும் உடந்தையாக இல்லை. அங்கே பிரச்னை செய்கிறவர்கள் நாங்கள் பிரச்னை செய்ய போகிறோம் என கூறிவிட்டா செல்வார்கள். அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் தான். இதில் யாருக்கும் சாதகமாக தமிழக அரசு செயல்படவில்லை. காரைக்குடி சட்டக் கல்லூரியில் நடப்பாண்டில் ஒருங்கிணைந்த  5 ஆண்டு படிப்பு மற்றும் 3ஆண்டு படிப்புகளுக்கான  சேர்க்கை நடக்கும்.  தமிழகத்தில் கூடுதலாக சட்டக்கல்லூரிகளை உருவாக்க கூடுதலாக நிதி  தேவைப்படுகிறது. இருந்தாலும், காரைக்குடியில் மாணவர் சேர்க்கை தொடங்கும். சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில்  கல்லூரிகளை தொடங்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை,  திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம்,  சேலம், நாமக்கல், தேனி ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் 14 அரசு  சட்டக்கல்லூரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில்  உள்ள இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பெருங்குடி  வளாக சீர்மிகு சட்டப்பள்ளியில் 624 இடங்களுக்கும், இதர கல்லூரிகளில் உள்ள  1,731 இடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 355 இடங்களுக்கு இந்த ஆண்டு  விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு மூலம் அவை நிரப்பப்பட இருக்கின்றன. விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடுகளின் அடிப்படையிலும்  வரிசைப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

Related Stories: