அதிமுக வங்கிக் கணக்குகள் முடக்கப்படுமா?.. பொருளாளர் பதவி தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் எழுதிய போட்டி கடிதத்தால் குழப்பம்..!

சென்னை: அதிமுக வரவு, செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். நேற்று அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டனர். இதனிடையே அதிமுகவின் புதிய பொருளாளர் நியமனம் தொடர்பாக கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அதிமுக வரவு, செலவு கணக்குகளை தன்னை கேட்காமல் மேற்கொள்ள கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்; இந்திய தேர்தல் ஆணைய சட்டப்படி இன்று வரை நானே பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் என்னை கேட்காமல் எந்த வரவு - செலவு கணக்கையும் மேற்கொள்ள கூடாது. மீறி வரவு - செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக பொருளாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எழுதிய போட்டி கடிதத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் அதிமுக வங்கிக் கணக்குக்கு உரிமை கொண்டாடுவதால் யாரை அனுமதிப்பது என வங்கிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: