குன்னூர், கோத்தகிரியில் 7 பழங்குடியின பகுதிக்கு மின் வசதி-நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

குன்னூர் :  குன்னூர், கோத்தகிரியில் உள்ள 7 பழங்குடியின கிராம பகுதிக்கு மின்சார வசதி செய்துதர மின்வாரிய அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி கலெக்டர் அம்ரித் உறுதியளித்தார். நீலகிரியில் இருளர், குரும்பர், பணியர், காட்டுநாயக்கர், தோடர், கோத்தர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசிகின்றனர். குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதியில் பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இதில் வனப்பகுதி மத்தியில் பணியர், இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகா பகுதியில் ஜோகி கோம்பை கிராமத்தில் 10 குடும்பம், செங்கல் கோம்பை கிராமத்தில் 15 குடும்பம், மல்லிக்கொரை கிராமத்தில் 8 குடும்பம், மேல்குரங்கு மேடு கிராமத்தில் 5 குடும்பம், அணில் காடு கிராமத்தில் 30 குடும்பம், செந்தோரை, வாகை பண்ணை கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பம் எவ ஏழு கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இது நாள் வரை மின்சாரம் என்பதே அறியாமல் வாழ்ந்து வருகின்றனர். நள்ளிரவில் வன விலங்குகள் நடமாட்டத்தின் மத்தியிலும் இடி, புயல் என எது நேர்ந்தாலும் இருளிலேயே வாழ்கின்றனர்.  

இம்மக்களின் வாழ்வியல் அங்குள்ள இயற்கையை மட்டுமே நம்பியுள்ளது. மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதி கிடையாது. மின்சார வசதி இல்லாததால் இவர்களின் வீடுகளில் டிவி கிடையாது. இது குறித்து பழங்குடியின செயற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘‘அடர் வனத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இது நாள் வரை மின்சாரம் என்பதே அறியாமல் உள்ளனர். மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் சத்தான உணவின்றியும் தவிக்கின்றனர். சாலை வசதி இல்லாமல் அண்மையில் பில்லூர் மட்டம் முதல் ஆனைப்பள்ளம் வரை சாலை அமைத்தது வரவேற்பை பெற்றுள்ளது. இருளில் வாழ்ந்து வரும் பழங்குடியின கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழங்குடியின மக்கள் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடத்தினாலும் பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தபடி அவர்கள் கடவுளாக வழிப்படும் பெரிய காட்டுபலா மரம் போன்ற இயற்கையை வணங்கிய பிறகு தான் நிகழ்ச்சியை துவங்குவர். இவர்களின் வாழ்வில் மூங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூங்கில் மூலம் இசை கருவிகளை தயாரித்து அவற்றையும் கற்றும் வருகின்றனர்.

பழங்குடியின மக்களில் படித்த இளைஞர்கள் கூறுகையில், ‘‘பழங்குடியின மக்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு  மற்றும் பழங்குடியின குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் குழந்தைகள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தங்களின் பாரம்பரிய இசை, உணவு, உடை, தொழில் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்க தீவிர முயற்சி செய்து வருகின்றோம். இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு வெளி உலகம் பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை’’ என்றனர்.  

பழங்குடியின மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமங்களில், மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி கிடையாது.  அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் தேவைக்காக சுமார் 2 கிமீ சென்று தலை சுமையாக தண்ணீர் சுமந்து வரும் நிலை உள்ளது. வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால்  இரவு 6 மணிக்கு மேல் வீட்டைவிட்டு யாரும் வெளியே வருவதில்லை. மேலும் வீட்டிற்கு செல்ல நடைபாதை வசதி கூட இல்லாமல் கரடு முரடான பாதையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இங்கு குடியிருக்கும் பழங்குடியின மக்கள் செல்போன்களை சோலார் மூலம் சார்ஜ் செய்து வருகின்றனர். ஆனால் பல முறை அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டாலும் இதற்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தி தரவில்லை. தமிழக அரசு மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்’’ என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், ‘‘குன்னூர் உலிக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட மேல் குரங்கு மேடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் எழுந்த நிலையில் முதற்கட்டமாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஏழு பழங்குடியின கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் மின்சார வசதி செய்வதற்கான நடவடிக்ககை எடுக்கப்படும்’’ என்றார்

இது தொடர்பாக மின்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பழங்குடியின கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதி மத்தியில் அமைந்துள்ளது. மேலும் மின் கம்பங்கள் அமைக்க முறையான அனுமதி பெற வேண்டும். குரங்கு மேடு, மல்லிக்கொரை உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்க அனைத்து சாத்தியமும் உள்ளன.

மின் கம்பங்களை வனப்பகுதியில் சுமந்து செல்வது கடினமான ஒன்று. இருப்பினும் அதற்கு அனுமதி கிடைத்தவுடன் கண்டிப்பாக மின்சார வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: