கட்சி சின்னத்தில் இருப்பதோ இரண்டு இலைகள் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கொண்டாடுவதோ 3 பேர்: ஹீரோ யார், வில்லன் யார், காமெடியன் யார் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா இடையே மோதல்

சென்னை: அதிமுக கட்சி சின்னத்தில் இருப்பது இரண்டு இலைகள் தான். ஆனால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு இப்போது 3 பேர் உரிமை கொண்டாட தொடங்கியுள்ளனர். இதில் ஹீரோ யார், காமெடியன் யார் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது. தலைமைக்குள் ஏற்பட்ட மோதலால் தொண்டர்கள் திக்கு தெரியாது நிற்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்து வந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் பிரிந்து சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இணைந்தனர்.

இரண்டு பேரும் இணைந்ததும் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியை பறித்தனர். இனி நிரந்தர பொதுச்செயலாளர் பதவி என்பது அதிமுகவில் கிடையாது. எப்போதும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று அதிரடியாக அறிவித்தனர். அதே நேரத்தில் கட்சியை வழிநடத்தி செல்லும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். கட்சியை ஓபிஎஸ், இபிஎஸ் தான் நடத்தி வந்தனர். கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து தான் கையெழுத்து போட்டனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஒற்றை தலைமை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. இந்த நிலையில் எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு நேற்று நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம், இன்னும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக நான் தான் இருந்து வருகிறேன் என்று சசிகலா கூறி வருகிறார்.  

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் நாட போவதாக தெரிவித்துள்ளார். இன்று வரை அதிமுக பொதுச்செயலாளர் என்று நான் தான் சசிகலா பெயரிலான அறிக்கைகள் வெளியாகி வருகிறது. இதனால், தற்போதைய சூழ்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என்று 3 பேர் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கொண்டாட தொடங்கி உள்ளனர். அதிமுகவில் உள்ள சின்னத்தில் இருப்பது இரட்டை இலைகள் தான்.  ஆனால், அதற்கு நான் தான் பொதுச்செயலாளர் என்று எத்தனை பேர் உரிமை கொண்டாட போகிறார்களோ என்ற பரபரப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக தலைமைக்கு சொந்தம் கொண்டாடி 3 பேரும் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

ஒரு  சினிமாவில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என்று 3 பேர் தான் இருப்பார்கள். அப்போது தான் அந்த படம் ரசிக்கும் வகையில் இருக்கும்.  ஆனால், அதிமுகவில் சசிகலாவை காமெடியனாக மட்டும் தான் தற்போது நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற போகும் கதாநாயகன் யார். அதே நேரத்தில் அந்த போட்டியில் தோல்வியடைந்து யார் வில்லன் ஆக போகிறார்கள் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் யார் வெல்ல போகிறார்கள் என்பது அடுத்தடுத்து வரும் நாட்களில் அரங்ேகற போகிறது என்பது தெரியவரும். பொதுச் செயலாளர், பொதுச்செயலாளர் என்று கட்சியை இப்படி துண்டு, துண்டாக்க பார்க்கிறார்களே என்ற ஆதங்கம் உண்மையான அதிமுக தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

Related Stories: