நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் கடுங்குளிரால் வெறிச்சோடியது ஊட்டி படகு இல்லம்

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து ஊட்டி படகு இல்லம்  வெறிச்சோடி காணப்பட்டது. ஊட்டி  மத்திய பஸ் நிலையம் அருகே  ஊட்டி ஏரியில் படகு இல்லம் உள்ளது.  இங்கு வரும்சுற்றுலா பயணிகள்  படகு சவாரியில் அதிகம் ஆர்வம் காட்டி வருவார்கள்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு  வாரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்து வரும் இந்த  மழையால் ஊட்டி நகரில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வார நாட்களில் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக  குறைந்துள்ளது.

வார இறுதி நாட்களில் சற்று அதிகமான சுற்றுலா பயணிகள்  வருகை புரிகின்றனர். ஞாயிற்றுகிழமையான நேற்றும் ஊட்டியில் காலை முதல் சாரல்  மழை பெய்த நிலையில் குளிர் நிலவியது. இதனால் குறைந்த அளவிலான சுற்றுலா  பயணிகள் மட்டுமே படகு சவாரி செய்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு  சவாரி செய்ய ஆர்வம் காட்டவில்லை. குழுவாக வந்திருந்தவர்கள் மட்டும்  மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர்.

ஏரியின்  மறுகரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் முற்றிலும் சுற்றுலா பயணிகள்  கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.இதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா,  ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Related Stories: