தாமிரபரணி ஆற்றில் மிதக்கும் ஆயில் கழிவுகள்-சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

நித்திரவிளை : குமரி மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியாக விளவங்கோடு கிள்ளியூர் தாலுகா வழியாக தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்கிறது இந்த ஆற்றின் கரையில் குடிநீர் கிணறுகள்  அமைக்கப்பட்டு  பல்வேறு வகையிலான குடிநீர் திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் எடுக்கப்படுகிறது.

 கடந்த இரண்டு நாட்களாக மங்காடு ஆற்றுப் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் ஆயில் கலந்த கழிவு  கீழ் நோக்கி வந்த வண்ணம் உள்ளது. இந்த ஆற்று நீரில் பொதுமக்கள் குளித்த போது உடம்பில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால்  பொதுமக்கள் ஆற்றில் குளிக்காமல் திரும்பி செல்கின்றனர், இந்த கழிவுகளால் மங்காடு, வாவறை ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் திட்டங்களும் நாசமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  இது சம்பந்தமாக பொதுமக்கள் கூறியதாவது, மங்காடு ஆற்றுப் பாலத்திற்கும்   குழித்துறை தடுப்பணைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தான் இந்த கழிவு ஆற்றில் கலந்து வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகளை மழை காலங்களில் வடிகாலில் திறந்துவிடுவது வழக்கம். அதுபோல் திறந்து விட்டுள்ளனர். அதேவேளையில் மழை குறைந்துவிட்டதால் ஆற்றில் நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் ஆயில் கலந்த கழிவுகள் ஆற்றில் மிதந்த நிலையில் செல்வதை காணமுடிகிறது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி விளவங்கோடு,  கிள்ளியூர் தாலுகா மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆற்றில் கழிவுகளை கலக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆற்றுநீரை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினர்.

Related Stories: