மஞ்சப்பை விழிப்புணர்வு 100 கிமீ தூரம் பழைய பைக் பேரணி

கோபி :  பிளாஸ்டிக்  பயன்பாட்டை தவிர்க்கவும், மஞ்சப் பையை மீண்டும்  பயன்படுத்த வலியுறுத்தியும், பழமையான வின்டேஜ்  ஜாவா எஸ்டி அமைப்பினர் பைக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திருப்பூரில் தொடங்கிய பேரணி கோபி  வழியாக கடம்பூர் மலைக்கிராமம் வரை 100 கிமீ தூரம் நடைபெற்றது.ஈரோடு, திருப்பூர்  மாவட்டத்தில் மிக பழமையான இருசக்கர வாகனங்களுக்கான ஜாவா, யஜூடி வின்டேஜ்  அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக்  பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், அரசின் திட்டமான மஞ்சப் பை திட்டத்தை  மீண்டும் மக்கள் பயன்படுத்துவன் அவசியத்தை வலியுறுத்தியும்,  குறிப்பாக மலைக்கிராமங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க  வலியுறுத்தி நேற்று திருப்பூரில் இருந்து 40 முதல் 60 ஆண்டுகள் வரை  மிக  பழமையான இருசக்கர வாகனங்கள் மூலமாக 30க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு  பேரணியில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் தொடங்கிய பேரணி, பெருமாநல்லூர்,  குன்னத்தூர், கெட்டிச்செவியூர், கொளப்பலூர், கோபி, பங்களாபுதூர்,  டி.என்.பாளையம், கே.என். பாளையம் வழியாக கடம்பூர் மலைக்கிராமம் வரை 100 கிலோ  மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடம்பூரில் பிளாஸ்டிக்  பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தியும், மஞ்சப் பையின் அவசியத்தை  வலியுறுத்தியும், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் பொதுமக்களுக்கு துண்டு  பிரசுரங்களை வழங்கினர்.

இந்த பேரணி, பொதுமக்களை வெகுவாக  கவர்ந்தது. முன்னதாக கே.என்.பாளையம் வனத்துறை சோதனைச்சாவடியில் மர விதைகளை  வனத்துறையினருக்கு அமைப்பினர் வழங்கினர். இது குறித்து கோபியை  சேர்ந்த வின்டேஜ் ஜாவா நிர்வாகி அகிலன் கூறும்போது, ‘‘பிளாஸ்டிக் பொருட்கள்  பயன்படுத்துவதை தவிர்க்கவும், மஞ்சப்பையை பயன்படுத்தவும் அரசு வலியுறுத்தி  வருகிறது. பொதுமக்களிடையே வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை  ஏற்படுத்தவே இந்த அமைப்பு மூலம் 100 கி.மீ தூரம் பேரணி நடத்தப்பட்டது’’ என்றார்.

Related Stories: