இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் பங்கு அதிகம்; வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

வேலூர்: இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் பங்கு அதிகம் என்று வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். வேலூர் சிப்பாய் புரட்சியின் 216வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று வேலூர் மக்கான் சிக்னலில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி போலீசார் மற்றும் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

வேலூர் மண்ணில் 1806ல் நடந்த புரட்சிதான் இந்திய சுதந்திர போருக்கு வித்தாக ஊன்றப்பட்டது.

இது சிப்பாய் கலகமாக வரலாற்றில் கூறப்பட்டாலும் பிரிட்டிஷாருக்கு எதிரான முதன்முதலாக எழுந்த சுதந்திரப் போர் என்றே கூற விரும்புகிறேன்.  1947ல் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்டபோது, இந்தியாவுக்குள் 600 சிற்றரசுகள் இருந்தன. சர்தார் வல்லபாய்படேல் அவற்றையெல்லாம் ஒன்றிணைத்தார். தற்போது தேசம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையிடத்துக்கு உயரும். இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் பங்கு அதிகம். அதேபோல் தமிழகத்தில் பல மாவட்டங்களின் வளர்ச்சி விகிதத்தில் வேறுபாடுகள் உண்டு. இந்த வளர்ச்சி அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வர வேண்டும். இந்தியாவை பொருளாதாரத்தில் வலுவாக வளர்ந்து வரும் நாடாக உலக நாடுகள் பார்க்கின்றன.

அதற்கேற்ப கொரோனா நெருக்கடியின்போது 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை நாம் வழங்கினோம். இன்னும் 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர ஆண்டை கொண்டாட உள்ளோம். அப்போது உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே நமது பிரதமரின் கனவாக உள்ளது. அதற்கான தெளிவான பாதையும் நம்மிடம் உள்ளது. அந்த பாதையில் சென்று நாட்டை முன்னேற்ற ஒன்றுபட்டு பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். கவர்னர் தனது பேச்சை தொடங்கும் போது முதல் ஐந்து நிமிடங்கள் தமிழிலேயே பேசினார். அப்போது தமிழ் தொன்மையான மொழி, அழகான மொழி, சக்தி வாய்ந்த மொழி. அதை தமிழ் மக்கள் போல் சரளமாக பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும். நிச்சயம் ஒரு நாள் நானும் சரளமாக தமிழில் பேசுவேன் என்றுகூறி, தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச்சை தொடர்ந்தார்.

Related Stories: