அமர்நாத் பனிலிங்க தரிசனம்.! வானிலை சரியானதும் யாத்திரை தொடங்கும்; ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

ஜம்மு: மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள அமர்நாத் யாத்திரை, விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை, கடந்த 2 ஆண்டுகளாக கொரோன தொற்றினால் ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று அபாயம் குறைந்ததால், இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. மொத்தம் 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் 8 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்துள்ளனர். இந்நிலையில், அமர்நாத் குகைக் கோயிலின் அடிவாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 16 பக்தர்கள் பலியாகினர். 40 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, மோசமான வானிலை காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏராளமான பக்தர்கள் யாத்திரையை கைவிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், வானிலை சரியானதும் மீண்டும் யாத்திரை தொடங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு நேற்று அறிவித்தது. இதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

Related Stories: