மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் பாஜ தலைவர்களுடன் ஷிண்டே ஆலோசனை: அடுத்த வாரம் அமைச்சர்கள் பதவியேற்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவை விரிவாக்கம் பற்றி பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜ.வுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் பதவியை ஏற்ற பிறகு நேற்று முன்தினம் முதல் முறையாக டெல்லி சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜ தலைவர் நட்டா உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார்.

அப்போது, பாஜ.வை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பெட்நவிசும் உடனிருந்தார். நட்டாவுடன் ஷிண்டே 40 நிமிடங்கள் பேசினார். இதில், மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் பற்றி விவாதித்தாக தெரிகிறது. டெல்லி பயணத்தை முடித்த ஷிண்டே, நேற்று மாலை புனே திரும்பினார். முன்னதாக, டெல்லியில் அவர்அளித்த பேட்டியில், ‘அடுத்த வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. எங்கள் அரசுக்கு 164 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். பாஜ ஆட்சிக்கு வர பிற கட்சிகளை உடைப்பதாக கூறுகின்றனர். ஆனால், பாஜ.வுக்கு 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். என்னிடம் 50 எம்எல்ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் என்னைத்தான் முதல்வராக்கி உள்ளனர்,’’ என்றார்.

பாஜ.வுக்கு 29 அமைச்சர்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும், பின்பும் என 2 கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷிண்டே அணியில் 12 பேருக்கும், பாஜ.வில் 29 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Related Stories: