ஆஷாட நவராத்திரி விழா நிறைவு: தஞ்சை பெரிய கோயிலில் வராகி அம்மன் திருவீதி உலா

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வராகி அம்மன் மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகைகள், காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி அளவில் கோயில் வளாகத்தில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Related Stories: