காமராஜுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுக்கு காரணம் யார்?.. ஓபிஎஸ் மீது பொய் பிரசாரத்தை கிளப்பி விடும் அதிமுக ஐடி விங்க்: எடப்பாடி அணியினரின் உண்மை வெளியானதால் பரபரப்பு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதற்கு ஓபிஎஸ்தான் காரணம் என்று, அதிமுக ஐடி விங்க் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்களும் பொய் பிரசாரத்தை கிளப்பிவிடும் தகவல் ஆதாரத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி அணியினர் தொடர்ந்து போர்க்கொடி எழுப்பி வருகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை தலைமை முறையே போதுமானது என்று கூறி வருகின்றனர்.

இதனால் எடப்பாடி - ஓபிஎஸ் அணியினர் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை கோரிக்கைக்கு ஆதரவாகவும், பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வகிக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கு அதிமுக நிர்வாகிகள் தற்போது பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஓபிஎஸ் அணியினருக்கு நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஓபிஎஸ், நீதிமன்றம் சென்றுள்ளார். வருகிற 11ம் தேதி (நாளை மறுதினம்) அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அதற்கு தடை கோரி ஓபிஎஸ், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் காலை 9 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9.15 மணிக்கு பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி மோதலுக்கு ஓபிஎஸ்தான் காரணம் என்று எடப்பாடி அணியினர், குறிப்பாக அக்கட்சியின் ஐடி விங்க் பொறுப்பாளர் ராஜ் சத்யன் மூலம் தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஏற்கனவே, ஓபிஎஸ், சசிகலாவுடன் தொடர்பில் உள்ளார் என்று அதிமுக ஐடி விங்க் அணியினர் தகவல்களை பரப்பி விட்டனர். இது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் கடந்த மாதம் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.

இதில் ஓபிஎஸ் கலந்து கொள்ள வந்தபோது, அவர் மீது பாட்டில் வீச்சு சம்பவம் நடந்தது. இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமை கோரிக்கையை பொதுக்குழுவில் நிறைவேற்ற முடிவு செய்தனர். ஆனால், ஓபிஎஸ் திட்டமிட்டு நீதிமன்றம் சென்று அந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுத்துவிட்டார். தமிழக அரசின் ஆதரவுடன் ஓபிஎஸ் செயல்படுகிறார் என்று ஐடி விங்க் தவறான தகவல்களை பரப்பி விட்டது.

தற்போது, முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலகத்தில் நேற்று சோதனை நடைபெற்றது.

இதற்கும் அதிமுக ஐடி விங்க் புதிய கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இது வாட்ஸ்அப் மூலம் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் பரப்பியுள்ள தகவல் வருமாறு: “சுரேஷ் அண்ணா (ஐடி விங்க்) என்பவர், ஐடி விங்க் பொறுப்பாளர் ராஜ் சத்யனுக்கு ஒரு தகவல் வாட்ஸ்அப்மூலம் அனுப்பியுள்ளார். அதில், காமராஜ் மேல் ஸ்டாலின் ரெய்டு விட்ருக்காருல. அதுக்கு பின்னாடி ஓபிஎஸ் தான் இருக்காருன்னு பரப்பிவிட்டா நல்லா வைரல் ஆகும்னா...” என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து வேலு என்ற நபர், “சூப்பர்னா... ஏற்கனவே ஓபிஎஸ், திமுக கைக்கூலின்னு நாம பத்த வெச்சது நல்லா பரவுச்சு. அதோடு இதையும் சேர்த்துவுட்டா எல்லாரும் உண்மைன்னு நம்பிடுவாங்க” என்று கூறியுள்ளார். அதற்கு சரவணா என்ற நபர், “ஆரம்பிச்சிடலாமா!” என்று பதிலளித்துள்ளார். இவர்களின் வாட்ஸ் அப் பதிவுக்கு, அதிமுக ஐடி விங்க் பொறுப்பாளர் ராஜ் சத்யன் பதிலளிக்கும்போது, “நல்ல ஐடியா... வெயிட் பண்ணுங்க. நான் தலைவர்கிட்ட (எடப்பாடி பழனிசாமி) பேசிட்ட சொல்றேன்...” என்று பதிலளித்துள்ளார்.

அதிமுக ஐடி விங்க் வாட்ஸ்அப் குரூப் இப்படி ஒருவருக்கொருவர் பேசிய ரகசிய உரையாடலை, யாரோ ஒரு நபர் வெளியில் தெரிவித்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் நடைபெறும் அதிமுக உள்கட்சி பிரச்னையாகட்டும், தமிழக அரசு அறிவிப்புகளாகட்டும், மற்ற கட்சிகளில் உள்ள பிரச்னையாகட்டும்... இப்படித்தான் அதிமுக ஐடி விங்க் வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கொருவர் பேசி தமிழக மக்களுக்கு தவறான கருத்துக்களை பரப்பி வருவது இதன்மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இனியாவது, அதிமுக தொண்டர்களும், அரசியல் பிரமுகர்களும் உஷாராக இருக்க வேண்டும்.

Related Stories: