பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்-இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் பேச்சு

சித்தூர் : ‘காஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ரமாதேவி பேசினார்.

சித்தூரில் நேற்று காந்தி சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சமையல் எரிவாயு விலை உயர்த்தியதை  உயர்த்தியதை கண்டித்து காலி சிலிண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரமாதேவி ேபசியதாவது:

 மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாதாமாதம் காஸ் சிலிண்டர் விலை உயர்த்திக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தி 1080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் 50 ரூபாய் விலை உயர்த்தி உள்ளது. தற்போது 1130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

 பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் சமையல் எரிவாயு உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்த்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கூலி வேலை செய்யும் பெண்கள் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் அரிசி பருப்பு, எண்ணெய் கோதுமை உள்ளிட்டவிலை விண்ணை தொடும் வகையில் உயர்ந்துள்ளது.

 இதே நிலை நீடித்தால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும். இதே நிலை நீடித்தால் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மாபெரும் தோல்வி அடைந்து விடும். இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் பாரதீய ஜனதா கட்சியின் மீது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீது கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள். ஆகவே மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா  அரசு உயர்த்திய பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் விஜய கவுரி, துணைச் செயலாளர் குமாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜ், நகர தலைவர் மணி, பொருளாளர் கோபி, செயலாளர் கிட்டுபாய் உள்பட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து ெகாண்டனர்.

Related Stories: