தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!: சவூதி அரேபியாவை பின்பற்றி சில அமைப்புகள் இன்றே தொழுகை..ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!!

குமரி: தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சில அமைப்புகள் சவூதி அரேபியாவை பின்பற்றி நாகர்கோவிலில் இன்றே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டன. ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், ஹெச் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சில அமைப்பினர் சவூதி அரேபியாவை பின்பற்றி இன்றே பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இளங்கனி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏரளாமானோர்  கலந்துக்கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இவர்கள் சவூதி அரேபிய நடைமுறையை பின்பற்றி தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையினை இன்றே கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காக பிரித்து ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். மேலும் நாகூரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். நாகை மாவட்டம் முழுவதும் சில மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையும் நடத்தினர்.

Related Stories: