ஊட்டியில் ஒரு வாரம் நீடித்த மழை தமிழகம் மாளிகை பூங்காவில் மேரிகோல்டு மலர்கள் அழுகி உதிர்ந்தன

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் ேமரிகோல்டு மலர்கள் அழுகி உதிர்ந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் ஊட்டியில் எந்நேரமும் காற்றுடன் கூடிய மழை பெய்துக் கொண்டே இருக்கும். இதனால், பெரும்பாலான இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அதேபோல், தாழ்வான பகுதிகளில் பயிரிட்டுள்ள விவசாய பயிர்களும் பாதிக்கும்.

மேலும், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தமிழகம் மாளிகை பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் தேயிலை பூங்காக்களில் உள்ள மலர் செடிகளும் பாதிக்கும். இந்த பூங்காக்களில் உள்ள மலர்கள் மழையால் அழுகி உதிரும். இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்கா இரண்டாவது சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டுள்ளன. ரோஜா பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்காக்களில் மட்டுமே தற்போது மலர்கள் காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக நீலகிரி மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் நேற்று முன்தினம் வரை எந்நேரமும் சாரல் மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்து வந்தது. இதனால், ரோஜா பூங்கா, தமிழகம் மாளிகை பூங்காக்களில் உள்ள மலர் செடிகள் பாதிக்கப்பட்டன. தமிழகம் மாளிகை பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மேரிகோல்டு மலர்கள் அழுகி உதிர துவங்கியுள்ளன. மேலும், மலர் செடிகளும் பாதித்துள்ளன. தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து செடிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: