பெருமாள் ஏரி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வலியுறுத்தல்-கரைகளை பலப்படுத்தும் பணி தீவிரம்

குறிஞ்சிப்பாடி :  குறிஞ்சிப்பாடி, பெருமாள் ஏரியில் புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், அகரம் ஆகிய கிராமங்களுக்கு இடையே 227 சதுர கிலோ மீட்டரில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில், இரண்டாம் பராந்தக சோழன் என்பவரால் அமைக்கப்பட்ட பழமையான மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியாகும்.

இந்த ஏரியில், தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியா நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான கடம்ப மரங்கள் இருந்தன. கடம்ப மரத்தின் பூக்களை தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு பூஜை செய்வர். இந்தப் மரத்தின் இலைகளை கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி, வரியன் பூச்சிகள் உண்டு வாழும். நீரோட்டமுள்ள கரைகளில் மட்டுமே வாழக்கூடிய கடம்ப மரங்களில் நீர்வாழ் பறவைகள் கூடுகட்டி வாழும்.

 அதேபோல், இந்த ஏரியில் மாவிலங்கம், அழிஞ்சல், வால் சுறா, காட்டுபுண்ணை, காட்டு எலுமிச்சை, பச்சை நழுவை, நஞ்சறுப்பான், கருங்காலி, வெண் பொரசு, இரும்புலி, கொஞ்சி பழம், விராலி செடி, புங்கன், மகிழம் உள்ளிட்ட 150 வகையான வெப்பமண்டல மற்றும் உலர் வெப்ப மண்டல காடுகளில் வாழும் பசுமை மாறா மரங்கள் இருந்தன. மேலும், ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் இருந்த காடுகளில் நீர்நாய், கீரிப்பிள்ளை, எரும்பு தின்னி, உடும்பு மற்றும் பல்வேறு வகையான ஊர்வன, பறவைகள், ஏராளமான பூச்சி இனங்கள், வண்டினங்கள், பாலூட்டிகள் வாழ்ந்தன.  

 இந்த ஏரியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க நீர் செங்கால் ஓடை வழியாக தொடர்ந்து வந்து, ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து காணப்படும். விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதால், ஏரி நீரை வடிய செய்யாமலிருக்க, மீன் வளர்க்க குத்தகை விடுவதில்லை. இதனால், ஆண்டு முழுவதும் இப்பகுதி மக்கள் எந்த கட்டணமும் இன்றி மீன் பிடித்து செல்வர்.

   

தூர்ந்து போனதால் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்த 23 கிராம மக்களின் 6,500க்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்ட வேளாண் நிலங்கள் முழுவதும் பாசனம் பெற முடியாமல் பாதிப்புக்குள்ளாகின. எனவே, ஏரியை தூர் வாரி, கரையை பலப்படுத்தி, கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என 23 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தமிழக அரசு 112 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 இப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனம் ஏரியின் கிழக்கு கரையில் இருந்த ஆயிரக்கணக்கான அரியவகை மரங்களை ஹிட்டாச்சி என்ற ராட்சத இயந்திரம் மூலம் வேருடன் பிடுங்கி, தீயிட்டு எரித்து சாம்பலாக்கியது. அதேபோல், விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு பெருமாள் ஏரியில் பல்வேறு நிறுவனங்கள் மணல் எடுத்து வருகின்றனர். இதற்காக, மரங்களை வேருடன் பிடுங்கி அகற்றினர்.

இதனால், இந்த மரங்கள் மற்றும் செடி கொடிகள் மற்றும் புதர்களை புகலிடமாகக் கொண்ட உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  பச்சை பசேலென பசுமை போர்த்தியது போல் காட்சி அளித்த பெருமாள் ஏரி கரைகள் மரங்கள் இன்றி, வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த மேற்கொண்டுள்ள நிறுவனம், பணிகள் முடிந்தபின், ஏரிக்கரைகளில் ஒரு மரத்திற்கு 10 கன்றுகள் வீதம் வெட்டப்பட்ட அனைத்து மரங்களுக்கும், பதிலாக ஏரிக்கரையில் அமைந்துள்ள 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு, வனத்துறை வழிகாட்டலுடன் வெப்பமண்டல மற்றும் உலர் வெப்ப மண்டலப் பகுதிகளில்

வாழும் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்கள் மேம்பாட்டிற்கு, வகை செய்ய மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். மேலும், பொதுமக்கள் வந்து பொழுதை கழிக்கின்ற வகையில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: