மகாராஷ்டிரா பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த புதுகை மாணவி கலெக்டராக விரும்பும் ஜெயலட்சுமி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த மகள் ஜெயலெட்சுமி(18). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் பி.ஏ.வரலாறு படித்து வருகிறார். ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்தபோது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசாவை(விண்வெளி ஆராய்ச்சி மையம்) பார்வையிட தேர்வு செய்யப்பட்டார். நாசா செல்வதற்கான முழு தொகையையும் கிராமலயா தொண்டு நிறுவனம் வழங்க முன்வந்தது. மேலும் தொண்டு நிறுவனம் வேறு ஏதாவது உதவி வேண்டும் எனில் கேளுங்கள் என்றதும், மாணவி எங்கள் ஊரில் எந்த ஒரு இல்லத்திலும் கழிவறை இல்லாததால் பெண்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே வாய்ப்பு இருந்தால் தங்கள் கிராமத்திற்கு கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று மாணவி கேட்டார். அவரது கோரிக்கை ஏற்ற அந்த கிராமாலயா தொண்டு நிறுவனம் பயனாளிகளின் பங்களிப்போடு ஆரனக்கோட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள 126 வீடுகளுக்கும் தனித்தனியாக குளியல் அறையுடன் கூடிய கழிவறையை கட்டி கொடுத்தது. இது அந்த கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இந்த மாணவியை பலரும் பாராட்டினர். ஜெயலட்சுமியின் இந்த செயல்பாடுகள்  மகாராஷ்டிரா மாநிலத்தில் 7ம் வகுப்பு  தமிழ் பாடப்புத்தகத்தில் கனவு மெய்ப்படும் எனும் தலைப்பில் நான்காம் பக்கத்தில் பாடமாக இடம்பெற்றுள்ளது.   

இதற்கிடையில் கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் ஹவுஸ் ஆப் கலாம், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன், ஸ்பேஸ் சோன் இந்தியா, மார்ட்டின் குரூப் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆயிரம் மாணவர்களைக் கொண்டு 100 சிறிய ரக செயற்கைக்கோள்கள் (பெம்டோ சாட்டிலைட்) தயார் செய்யப்பட்டது.  வானில் செலுத்தி காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களின் அளவை அறிந்து கொள்வதற்காக இவை தயாரிக்கப்பட்டன. இந்த குழுவில் ஜெயலட்சுமியும் இடம் பெற்றிருந்தார். இதற்காக கின்னஸ் உள்ளிட்ட ஐந்து உலக சாதனை புத்தகத்தில் ஜெயலெட்சுமி இடம் பிடித்தார். பாடம் புத்தகத்தில் இடம் பெற்றது குறித்து மாணவி ஜெயலெட்சுமி கூறுகையில், எனக்கு நாசா செல்ல அனுமதி கிடைத்தது.

ஆனால் கொரோனா காரணமாக  செல்ல முடியாமல் போய்விட்டது. மீண்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நாசா செல்வேன். நான் நான்காம் வகுப்பு படிக்கும் போதே எனது ஆசிரியரிடம் பாட புத்தகத்தில் இதுபோன்று இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஆசிரியர் நல்லா படிக்கணும். உன்னால முடியாத விஷயம் எதுவும் இல்லை என நினைத்து செயல்படு என்று தெரிவித்தார். நான்காம் வகுப்பில் ஆசைப்பட்ட எனது கனவு, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் என்னைப் பற்றிய பாடம் இடம்பெற்றதால் நனவாகியுள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏழ்மையான நிலையிலும் குடும்ப சிரமத்திற்கு இடையே நன்றாக படித்தேன். எனது கிராமத்திற்கு தேவையானவற்றை எனக்கு வந்த உதவி மூலம் செயல்படுத்தினேன். அதன் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தேன். சாதனைக்கு வறுமை தடையல்ல. தங்களால் முடியும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டால் எதையும் சாதித்து விடலாம். என்னை போன்ற பல பெண்கள் வெளியே தெரிய வேண்டும். வானியல் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலையும், பொருளாதாரமும் இடமளிக்காததால் தற்போது இளங்கலை வரலாறு படித்து வருகிறேன். நல்ல மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

Related Stories: