இலங்கை தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியை பல நாடுகளும் சந்திக்க நேரிடும்; ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: கொரோனா மற்றும் உக்ரைன் போரால் பாதிப்புகளை சந்தித்து வரும் நாடுகள், இலங்கை போன்று கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கவும் நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐநா வளர்ச்சி திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் மக்கள் மிகுந்த சோகமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண்பதாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற நெருக்கடியை ஒரு நாடு சந்திக்கும்போது அந்த நாட்டுக்கு பிற நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள நாடு நெருக்கடியில் இருந்து தானாகவே மீள வேண்டும் என்று எண்ணும் நாடுகள், தங்களுக்கும் இதுபோன்ற நெருக்கடி நேரக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளா். இலங்கை அரசு வாங்கிய கடனுக்கான வட்டியை கடந்த மாதம் செலுத்தாது குறித்து குறிப்பிட்ட அச்சிம் ஸ்டெய்னர், இலங்கையின் இன்றைய நிலை ஏற்கனவே நெருக்கடியை சந்தித்து வரும் பல நாடுகளுக்கும் எச்சரிக்கை என கூறியுள்ளார்.

ஒரு நாடு கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், அதனால் இறக்குமதி செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஐநா, நாட்டின் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான பெட்ரோல், டீசல், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் போனால் அந்ந நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மீளும் என கேள்வி எழுப்பினார். ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகள், கடந்த 2021ல் உலக அளவில் 82.80 கோடி பேர் பட்டிணியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் 67.80 கோடியாக இந்த எண்ணிக்கை இருந்ததாகவும், கொரோனா காரணமாக 15 கோடி பேர் கூடி இருப்பதாக தெரிவித்துள்ளது.

பண வீக்க விகிதம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையிலான கால கட்டத்தில் மட்டும் 7.10 கோடி பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. வளர்ச்சித் திட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் இவை இரண்டும் வளரும் நாடுகளை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ள ஐநா, இதனால், ஏழை – பணக்காரர்கள் இடையே வித்தியாசம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: