நெமிலி அருகே அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான அரசுப் பள்ளி கட்டிடம்-உடனடியாக சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

நெமிலி : நெமிலி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சி நெல்வாய் கண்டிகை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 36 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி கட்டிடம் 1993-ம் ஆண்டு ஜவகர்  வேலைவாய்ப்பு திட்டத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பள்ளி கட்டிடம் கட்டி 30 ஆண்டுகள் ஆகிறது. தற்போது பள்ளி கட்டிடத்தில் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் தளம்  சிமெண்ட்  பூச்சுகள்  உதிர்ந்து அடிக்கடி பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள் கல்வி பயிலும் போது விழுகிறது.   

இதனை சீரமைக்க அதிகாரிகளுக்கு பலமுறை ஆசிரியர்கள் தகவல் கொடுத்தும் மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாம். வகுப்பறையில் படிக்கும் 36 மாணவ மாணவிகள் ஒரே வகுப்பு கட்டிடம் உள்ளதால் இதில் பள்ளி கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து  விழும் ஆபத்தை உணர்ந்து அந்த கட்டிடத்தில் உயிர் பயத்திலும் உள்ளே கல்வி  பயின்று வருகின்றனர்.

இதன் தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், தங்களது குழந்தைகளை உயிர் பயத்துடன் பள்ளிக்கு  அனுப்பி வைக்கிறோம். உடனடியாக பள்ளி கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்   மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும் அவலம் உள்ளது.

மேலும் மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் உடனடியாக இப்பள்ளியை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து   மற்றொரு கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை முழுவதும் அகற்றிவிட்டு பள்ளி மாணவர்களின் உயிரைக்காக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: