டெல்டா விவசாயிகளுக்கு தடையின்றி ரசாயன உரம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டில், குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடி வழக்கத்துக்கும் அதிகமாக 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் சாகுபடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கானதேவையான உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்களில் 25,310 மெட்ரிக் டன் யூரியா, 20,000 மெட்ரிக் டன் டிஏபி, 13,360 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 34,430 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. முதல்வர் டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி பணியினை ஊக்குவிப்பதற்காக அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், ஏக்கருக்கு ரூ.2466.50 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்களை முழு மானியத்தில் 1,90,000 ஏக்கர் பரப்பளவிற்கு வழங்க வேளாண்மை உழவர் நலத்துறை உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

வேளாண்மை இயக்குனர், துறையின் அனைத்து நிலை உயர் அலுவலர்களும் உர விற்பனை மையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு உர விற்பனையினைக் கண்காணித்து வருகின்றனர்.தற்போது சாகுபடிப் பரப்பு அதிகமாகும் என்று எதிர்பார்ப்பதால், தமிழ்நாட்டில் உர பதுக்கல், செயற்கையாக உரப் பற்றாக்குறையை உருவாக்குதல் மற்றும் உரத்தட்டுப்பாடு ஏதும் நிகழாவண்ணம் மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது சட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 42 உரக் கடைகளின் உரிமம் தற்காலிகமாகவும் 5 உரக்கடைகளின் உரிமங்கள் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: