பொதுமக்கள் புகார் காரணமாக ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் திடீர் ஆய்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கினார்

ஆவடி: ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக, ஆவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர், நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கிடப்பில் உள்ள மனுக்கள், அதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வு நடந்தது.

அப்போது, கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், இந்த அலுவலகத்தில் சக்கர நாற்காலி இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவதாக தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் சா.மு.நாசர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சக்கர நாற்காலிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் சா.மு.நாசர் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கினார். அப்போது, மாற்றுத் திறனாளி ஒருவர் தனக்கு இருசக்கர வாகன வசதி செய்து தர வேண்டும், என கோரிக்கை மனு அளித்தார். இதை ஏற்ற அமைச்சர் மாற்றுத்தினாளிகள் நலத்துறையில் பரிந்துரை செய்து, ஒரு வாரத்தில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: