செங்கல்பட்டு அருகே பல்திறன் கொண்ட இரட்டை சகோதரிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பல்வகை திறன் கொண்ட 4 வயதான இரட்டை சகோதரிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். செங்கல்பட்டு அருகே மேலமையூர் கிராமத்தில் வசிப்பவர்கள் குணசீலன்-ரேவதி தம்பதி. கடந்த 4 வருடங்களுக்கு முன் ரேவதிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். ஷாவ்ஸ், ஷாவ்னி என பெயரிடப்பட்ட இரட்டை சகோதரிகளுக்கு தற்போது 4 வயதாகிறது. இத்தனை சிறுவயதிலேயே இருவரும் பல்வகை திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

இந்த இரட்டை சகோதரிகளுக்கு 3 வயது வரை பேச்சு வராததால், குணசீலன் தம்பதி தீவிர பேச்சு பயிற்சி கொடுத்துள்ளனர். பின்னர் படிப்படியாக தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் உயிரெழுத்தில் துவங்கி, பொது அறிவு தொடர்பான தகவல்களை சொல்லிக் கொடுக்க துவங்கினர். இத்தம்பதியின் முயற்சியால், தற்போது இரட்டை சகோதரிகள் அதீத நினைவு திறன் காரணமாக உயிரெழுத்துக்கள், திருக்குறள், குறிஞ்சி பாட்டு, 99 பூக்களின் பெயர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அதை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பெயர்கள், தமிழக ஆறுகளின் பெயர்கள், இந்திய தலைவர்களின் பெயர்கள், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், விலங்குகள், பறவைகள், தானியவகைகள் என 28 தலைப்புகளின்கீழ் தமிழ், ஆங்கிலத்தில் மழலை குரலில் பதிலளித்து ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

இதன்மூலம் அப்துல்கலாம் ரெக்கார்ட், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட், ஓஎம்ஜி ரெக்கார்ட் மற்றும் நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் உள்ளிட்ட 5 உயரிய விருதுகளை இரட்டை சகோதரிகள் பெற்றுள்ளனர். மேலும், கிரான்ட் மாஸ்டர் அவார்டுக்கும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழக அரசின் விருது, கின்னஸ் சாதனைக்கு இரட்டை சகோதரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் அதீத நினைவு திறனை கண்டு அப்பகுதி மக்களுக்கு பெருமையையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

Related Stories: