குன்றத்தூர் அருகே சாலையை மறித்து மின்கம்பம்; வாகன விபத்து அதிகரிப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே கோவூர் பிரதான சாலையை மறித்தபடி ஒரு உயர் அழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இக்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். குன்றத்தூரில் இருந்து போரூர் செல்வதற்கு கோவூர் பிரதான சாலை முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் வழியே நாள்தோறும் மாநகர பேருந்து உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்னை நகரின் பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கோவூர் பிரதான சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கோவூர் பிரதான சாலை சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டது.

எனினும், இங்கு ஒரு பக்கத்தில் மின்வாரிய அலுவலகத்தின் முன்புறம், சாலையை மறித்தபடி ஒரு உயர் அழுத்த மின்கம்பம் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மின்கம்பம் இருப்பதை அறியாமல், அதன்மீது மோதி விபத்துக்கு உள்ளாகி படுகாயம் அடைகின்றனர். பகல் நேரங்களில் மின்கசிவு மற்றும் வாகன நெரிசலின்போதும் இந்த மின்கம்பத்தில் மோதி அடிபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனவே, கோவூர் பிரதான சாலையை ஆக்கிரமித்து உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தை, அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் அகற்றி, வேறொரு பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: