கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்; அங்காடி அதிகாரி எச்சரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளும் பொதுமக்களும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அங்காடி அதிகாரி கூறினார். தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், மக்கள் அதிகம் கூடுகின்ற பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், பூங்கா, திரையரங்கம் மற்றும் வணிக வளாக பகுதியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அங்காடி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்துள்ளார்களா என்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி ஆய்வு செய்தார். அப்போது காய்கறிகள் வாங்க முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் கொரோனா தொற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் இலவசமாக முக கவசம் அளித்தனர். முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகளை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி கூறுகையில், ‘’மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றோம். முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றோம். முக கவசம் அணியாத வியாபாரிகள் மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். கொரோனா விதிமுறைகளை மீறும் கடைகள் சீல் வைக்கப்படும்’’ என்றார்.

Related Stories: