தாய்லாந்து, துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தல் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 3.35 கிலோ தங்கம் பறிமுதல்: விமான பயணிகள் 3 பேர் கைது

சென்னை: தாய்லாந்து, துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.1.55 கோடி மதிப்புள்ள 3.35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தஞ்சாவூர், ராமநாதபுரம், சென்னையை சேர்ந்த 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். மும்பையில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஒரு பயணி தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு வந்து, மும்பையில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்கியதும், அதில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (31) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவருடைய கைப்பைக்குள் மூன்று பார்சல்கள் இருந்தன. அதை திறந்து பார்த்தனர். அந்த பார்சல்களில் 885 கிராம் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 39 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள், தங்கத்தை பறிமுதல் செய்து தஞ்சாவூர் பயணியை கைது செய்தனர். இந்த தங்கம் துபாயிலிருந்து மும்பைக்கு கடத்தி கொண்டுவரப்பட்டு, உள்நாட்டு விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது சபிக் (32), ராமநாதபுரத்தை சேர்ந்த மிர்ஷாத் அலி (30) ஆகிய இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்களுடைய உள்ளாடை, சூட்கேஸில் மறைத்து வைத்திருந்த 2.5 கிலோ எடை தங்க பசை மற்றும் தங்க செயின்களை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.16 கோடி. இதையடுத்து பயணிகள் இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் அடுத்தடுத்து நடத்திய சோதனையில் தாய்லாந்து மற்றும் துபாயிலிருந்து மும்பை வழியாக கடத்தி வந்த ரூபாய் 1.55 கோடி மதிப்புடைய 3.35 கிலோ தங்க பசை, தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பயணிகளிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Related Stories: